பெய்ரூட்:
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 4-ம் தேதி வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த வெடிவிபத்துக்கு அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என்று பெய்ரூட் மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, அரசின் அலட்சியப் போக்கை கண்டித்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். பெய்ரூட் முழுவதும் பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெய்ரூட் நகரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் நேற்று மேலும் தீவிரமடைந்தது. போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்களை அடித்து நொறுக்கியதோடு சாலைகளில் வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதன் காரணமாக வெடி விபத்தால் ஏற்கனவே நிலைகுலைந்து உள்ள பெய்ரூட் நகரம் கலவர பூமியாக காட்சியளித்தது.
இந்நிலையில், மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக லெபனான் அரசு பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹாசன் தியாப் அறிவித்துள்ளார். லெபனான் தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் ஹாசன் தியாப் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.