கொலை செய்யப்பட்ட வக்கீல் ரஞ்சித் 
செய்திகள்

வக்கீல் படுகொலை - 3 வக்கீல்கள் உள்பட 10 பேர் மீது வழக்கு

உத்தமபாளையத்தில் வக்கீல் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 வக்கீல்கள் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

உத்தமபாளையம்:

கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் உத்தமபாளையம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை இவர் கோர்ட்டில் இருந்து பணிகளை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார்.

அனுமந்தன்பட்டி அருகே கோவிந்தன்பட்டி பகுதியில் திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, பின்னால் ஒரு கும்பல் காரில் வந்தது. திடீரென அந்த கும்பல் காரை ரஞ்சித் மீது மோத விட்டனர். இதில் ரஞ்சித் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

உடனே காரில் இருந்து இறங்கிய கும்பல் ரஞ்சித்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். உடனே அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். அந்த வழியாக பஸ்சில் சென்ற பலரும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் கிடைத்ததும் உத்தமபாளையம் டி.எஸ்.பி. சின்னக்கண்ணு, இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கொலை செய்யப்பட்ட ரஞ்சித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொலை பற்றி துப்பு துலக்கவும், கொலையாளிகளை பிடிக்கவும் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட ரஞ்சித் குள்ளப்பகவுண்டன் பட்டியில் ராஜகாந்தம் என்பவரிடம் தென்னந்தோப்பை விலைக்கு வாங்கினார். இந்த தோப்பினை அவர் குறைந்த விலைக்கு வாங்கியதாக ராஜகாந்தத்தின் மகன் விஜயன் தகராறு செய்து வந்தார்.

இது தொடர்பாக வக்கீல் ரஞ்சித்துக்கும் விஜயனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இது குறித்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொண்டனர். கூடலூர் போலீஸ் நிலையம், கம்பம் தெற்கு போலீஸ் நிலையங்களில் இந்த மோதல் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை காரணமாக ரஞ்சித் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என கூறி பாதுகாப்பு கேட்டு டி.எஸ்.பி.யிடம் மனு கொடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி விஜயன், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட வக்கீல்கள் ஜெயபிரபு, மதன், சொக்கர் மற்றும் செல்வம் என்ற சுப்பு செல்வம், போடியைச் சேர்ந்த ராஜேஷ், ஆனந்தன், பிரதாப், சஞ்சை, மயிலம்மாள் ஆகிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வக்கீல் ரஞ்சித்தை வெட்டி கொலை செய்தது கூலிப்படை கும்பல் என தெரிய வந்தது. கொலை நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தை கூலிப்படையினர் தேர்வு செய்து கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. கூலிப்படையினரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? கொலைக்காக எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்பது உள்ளிட்ட விபரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

கொலைக்கு மூளையாக செயல்பட்ட விஜயன் சிக்கினால் மட்டுமே இது பற்றி முழு விபரங்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் காரணமாக குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.