கைது 
செய்திகள்

பாளை அருகே வக்கீல் வெட்டிக்கொலை- வாலிபர் கைது

பாளை அருகே நிலத்தகராறில் வக்கீலை வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள சென்னல்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 28). வக்கீல். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சண்முகம் மகன் செல்வம் (28) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று வேல்முருகன் குடும்பத்தினர் உறவினரை பார்ப்பதற்காக சென்று விட்டனர். வீட்டில் வேல்முருகன் மட்டும் தனியாக படுத்து தூங்கியுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த செல்வம் இடப்பிரச்சினை தொடர்பாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த செல்வம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து செல்வம் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இன்று வெகுநேரமாக வேல்முருகன் வீடு திறக்கப்படாததால் அப்பகுதியினர் ஜன்னல் வழியாக வீட்டினுள் பார்த்தனர். அப்போது வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். உடனடியாக முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தப்பியோடிய செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.