செய்திகள்

அமர்நாத் யாத்திரை: 89 யாத்ரீகர்கள் கொண்ட கடைசி குழு இன்று பயணம்

அமர்நாத் யாத்திரை சீசன் நிறைவு பெற உள்ள நிலையில், 89 நபர்கள் கொண்ட கடைசி குழு இன்று புறப்பட்டுச் சென்றது.

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் இயற்கையாகத் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் வரை இந்த யாத்திரை நீடிக்கும். அவ்வகையில் இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கியது. பாகல்காம் மற்றும் பல்தல் என இரண்டு பாதைகள் வழியாக பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர்.

கடல்மட்டத்தில் இருந்து 3880 மீட்டர் உயரத்தில் தோன்றிய இந்த பனி லிங்கத்தை இந்த ஆண்டு இதுவரை 2,58,414 பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், ஜம்முவில் இருந்து இன்று கடைசி யாத்திரைக் குழு புறப்பட்டுச் சென்றது.

பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட இந்த குழுவில் 15 பெண்கள், 37 சாதுக்கள் உள்ளிட்ட மொத்தம் 89 நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 56 பேர் பாரம்பரிய வழிப்பாதையான பாகல்காம் பாதை வழியாகவும், 33 பேர் பல்தல் பாதை வழியாகவும் குகைக்கோவிலுக்கு சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்கின்றனர்.

ரக்சாபந்தன் தினமான ஆகஸ்ட் 7-ம் தேதி சிறப்பு வழிபாட்டுடன் அமர்நாத் யாத்திரை நிறைவுபெறுகிறது.