இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத்தின் இந்த கோரத்தாண்டவத்தில் இருந்து மெல்ல மீண்டுவரும் இலங்கை மக்கள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இதற்கிடையில், சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து அந்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடலோர நகரமான சிலாபம் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினருக்கு இடையில் மீண்டும் கலவரம் வெடித்தது. முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
இதைதொடர்ந்து, ஹெட்டிபொல பகுதியிலும் இருபிரிவினருக்கு இடையில் மீண்டும் மோதல் வெடித்தது. இதில் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் தடுக்கவும் அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேவையற்ற வதந்திகள் பரவாமல் இருக்க சமூக வலைத்தளங்களும் முடக்கி வைக்கப்பட்டன.