செய்திகள்

லாலுபிரசாத் குடும்பத்தின் ரூ.45 கோடி சொத்து முடக்கம்

பாட்னா நகரில் லாலுபிரசாத் குடும்பத்தின் பெயரில் உள்ள ரூ.45 கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முடக்கியதாக அறிவித்தனர்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் 5 ஆண்டு கால ஆட்சியின்போது ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார். அப்போது, அவர் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் 2 ஓட்டல்களின் பராமரிப்பு உரிமையை ஒரு தனியார் நிறுவனத்துக்கு அளித்ததாகவும் இதற்காக பாட்னா நகரில் முக்கியமான இடத்தில் 3 ஏக்கர் நிலத்தை வணிக வளாகம் கட்டுவதற்காக லாலுபிரசாத்தின் குடும்பத்தினர் பினாமி நிறுவனம் ஒன்றின் மூலம் லஞ்சமாக பெற்றதாகவும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

இதன் அடிப்படையில் மத்திய அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் லாலுபிரசாத்தின் குடும்பத்தினர் மீது மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இது தொடர்பாக லாலுபிரசாத், அவருடைய மனைவி ராப்ரிதேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை வரவழைத்து அமலாக்கத்துறை தீவிர விசாரணையும் மேற்கொண்டது.