செய்திகள்

லாலு பிரசாத்துக்கு சமையல் செய்து கொடுக்க திருடர்களாக மாறி சிறை சென்ற தொண்டர்கள்

பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு சிறையில் 2 பேர் சமையல் செய்து கொடுத்தும் மறைமுகமாக பல்வேறு உதவிகள் செய்தும் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

ராஞ்சி:

பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு கால்நடை தீவன ஊழல் தொடர்பான 2-வது வழக்கில் 3½ வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டார். சொகுசாக வாழ்ந்த லல்லு ஜெயிலில் குளிரில் நடுங்கியும் பல்வேறு அசவுகரியங்களையும் அனுபவித்து வருகிறார்.

இதற்கிடையே லாலு பிரசாத் யாதவுக்கு ஜெயிலில் இருக்கும் அவரது கட்சி தொண்டர்கள் 2 பேர் ருசியாக சமையல் செய்து கொடுத்தும் மறைமுகமாக பல்வேறு உதவிகள் செய்தும் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஞ்சி நகரைச் சேர்ந்த மதன் யாதவ், லட்சுமண் மகதோ ஆகியோர் சிறந்த சமையல் கலை நிபுணர்கள் ஆவார்கள். லாலு பிரசாத் யாதவுக்கு மிகவும் நெருக்கமானர்கள். அவரது கட்சியில் தீவிர தொண்டர்களாக ஜார்கண்ட்டில் செயல் பட்டார்கள்

லாலு பிரசாத் யாதவ் சிறை சென்றதும் இருவரும் அவருக்கு சிறைக்கு சென்று உதவ திட்டமிட்டனர். இதையடுத்து தங்கள் மீது சுமித் யாதவ் என்பவரை ராஞ்சியின் டொரண்டோ போலீஸ் நிலையத்தில் திருட்டு புகார் அளிக்கச் செய்தனர்.

அதில் அவர் தன்னை மதன் யாதவும், மகதோவும் அடித்து உதைத்து ரூ.10,000 பணத்தை திருடிச் சென்றதாக கூறியிருந்தார். அவர்மீது சந்தேகம் ஏற்பட்டதால் டொரண்டோ போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் லோயர் பஜார் போலீசில் புகார் செய்தார். அங்கிருந்த போலீசார் புகாரை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து மதனும், மகதோவும் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டதால் இருவரும் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் லாலு பிரசாத் யாதவுக்கு சமையல் செய்து கொடுப்பது, பணிவிடை செய்வது போன்ற பணிகளை செய்து உதவி வருகிறார்கள்.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து விசாரணை நடத்த சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த இருவரும் முதல் வழக்கில் லல்லுவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதும் ஜெயிலுக்கு முன் கூட்டியே சென்று உதவியதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை ராஷ்டிரீய ஜனதா தளம் செய்தி தொடர்பாளர் சக்திசிங் திட்டவட்டமாக மறுத்தார். லாலு பிரசாத் யாதவ் தனது கட்சி தொண்டர்கள் யாரையும் ஜெயிலுக்கு போகச் சொல்லவில்லை, எனவே இருவரும் எப்படி ஜெயிலுக்கு சென்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும்’ என்றார்.