பாட்னா:
பீகாரில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோசி, கண்டகி உள்ளிட்ட ஆறுகளில் அளவுக்கு அதிகமாக ஓடுகிறது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பீகார் மாநில நீர்வள துறை மந்திரி லாலன் சிங் வெள்ள நிலவரம் குறித்து நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ஆற்றங்கரைகளை எலிகள் சேதப்படுத்தியதால் தான் வெள்ளம் ஏற்பட்டது என கூறியிருந்தார்.
இதுபற்றி பேசிய துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, எலிகள் மட்டுமல்ல, லாலு பிரசாத் யாதவும், காங்கிரசுமே காரணம் என குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இது இப்போது ஏற்பட்ட நிகழ்வல்ல. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஆற்றின் கரைகளை எலிகள் சேதப்படுத்தியது மட்டும் வெள்ளத்துக்கு காரணமல்ல. இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவுமே காரணம். அவர்கள் அனைவருமே இதற்கு பொறுப்பாவார்கள்’ என குற்றம் சாட்டினார்.