ராஞ்சி:
ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ். 1977-ம் ஆண்டு 29 வயதில் எம்.பி.யாகி பாராளுமன்றத்துக்கு செல்லும் முதலாவது இளம் எம்.பி. என புகழ் பெற்றார்.
1990-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதல்-மந்திரி ஆனார்.
அவருக்கு முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியில் கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்தது. இந்த ஊழல் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியிலும் தொடர்ந்தது.
அவர் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக மீண்டும் முதல்-மந்திரியான பின்பு கால்நடை தீவன ஊழலை அவருக்கு எதிராக பூதாகரமாக எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டது.
இதையடுத்து பாட்னா ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக 1997-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்-மந்திரியாக்கினார்.
காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டன.
வழக்கு விசாரணை பீகாரில் இருந்து தனியாக பிரிந்து சென்ற ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணைக்காக லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சென்று கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.
பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் உள்பட மொத்தம் 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 11 பேர் இறந்து விட்டதால் மீதம் உள்ளவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
லாலு பிரசாத் உடனடியாக கோர்ட்டிலேயே கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஜெயிலில் தண்டனை அனுபவித்த 2½ மாதங்களில் லாலு பிரசாத் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஜாமீனில் விடுதலையானார்.
லாலு பிரசாத் யாதவ் மீதான அரசு கருவூல பணம் ரூ.30 கோடி ஊழல் வழக்கு விசாரணை ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஷிவ்பால் சிங் முன்னிலையில் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இதைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் நேற்றே ராஞ்சிக்கு வந்து விட்டார். இன்று அவர் கோர்ட்டில் ஆஜரானார். அவருடன் மகனும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவும் வந்தார். இன்று காலை கோர்ட்டுக்கு வந்த நீதிபதி பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
இதனால், இவ்வழக்கின் தீர்ப்பு பற்றிய பரபரப்பு அதிகரித்தது. கோர்ட் வளாகத்தின் அருகே பல்வேறு ஊடகங்களை சேர்ந்த நிருபர்களும், ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த தொண்டர்களும் பெரும் திரளாக குவிந்திருந்தனர்.
உணவு இடைவேளைக்கு பின்னர் கோர்ட் மீண்டும் கூடியபோது லாலு பிரசாத் மீண்டும் நீதிபதியின் முன்பு ஆஜரானார். பிற்பகல் 3.30 மணியளவில் தீர்ப்பளித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஷிவ்பால் சிங், லாலு பிரசாத் யாதவ் உள்பட 15 பேரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்தார்.
பீகார் முன்னாள் முதல் மந்திரி ஜகநாத் மிஷ்ரா உள்பட 7 பேரை இவ்வழக்கில் இருந்து விடுவித்தும் அவர் உத்தரவிட்டார். தண்டனை விபரம் வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.