சாராயம் பதுக்கி வைத்த இடம். 
செய்திகள்

திருவள்ளூர் அருகே ஏரிக்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட சாராயம் பறிமுதல்

திருவள்ளூர் அருகே ஏரிக்கரையில் உள்ள புதரில் பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்ட சாராயம் மற்றும் தயாரிக்க பயன்படுத்தும் ஊறல்கள் ஆகியவை மதுவிலக்கு போலீசாரால் கண்டுபிடித்தனர்.

மாலை மலர்

திருவள்ளூர்:

உலகையே உலுக்கி வரும் கொரோனா என்னும் கொடிய வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. மேலும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் போன்றவை மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சத்தியவாணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு, நேமம், படூர் போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது படூர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள புதரில் 2 பேரல்களில் சாராயம் பதுக்கி வைத்து இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும் அவற்றுடன் ஒரு பேரலில் 200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், உபகரணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் ஏரியில் சாராயம் காய்ச்சிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.