நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே கீழவண்ணான் விளை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ் செல்வன் (வயது 62).
இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று அந்த பகுதியில் உள்ளது. தென்னந்தோப்பிற்கு முள் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த முள்வேலிகளை அதேபகுதியைச் சேர்ந்த நாகமணி (48), கூலித் தொழிலாளி என்பவர் அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ் செல்வன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், கிருஷ்ணகுமார் ஆகியோர் இது தொடர்பாக விசாரிக்க கீழவண்ணான் விளைக்கு சென்றனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட அவர்கள் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த நாகமணியிடம் விசாரித்தனர். திடீரென நாகமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் சார்லசை குத்தினார்.
இதில் இடது கன்னத்தில் அவருக்கு கத்திக்குத்து விழுந்தது. போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அவர்களை சரமாரியாக தாக்கவும் செய்தார். பின்னர் அங்கிருந்து நாகமணி தப்பியோடி விட்டார்.
இதையடுத்து காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர், சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நாகமணியை கைது செய்தனர்.
அவர் மீது இந்திய தண்டனைச்சட்டம் 294(பி), 323, 324, 353, 506(2) ஐ.பி.சி. ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.