சென்னை:
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தி பேசும் வட மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளில் இந்தி வழக்காடு மொழியாக இருக்கலாமாம். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அந்த உரிமை தமிழுக்கு கிடையாதாம். இதில், என்ன கொடுமை என்றால் இடைக்காலத்தில் தமிழிலும் வாதாடலாம் என்ற நிலை சென்னை ஐகோர்ட்டில் இருந்து வந்தது. அன்றைய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா இதற்கு துணையாகவும் இருந்தார். மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழில் வாதாட நீதிபதி மணிக்குமார் அனுமதியும் வழங்கினார். பிறகு வந்த தலைமை நீதிபதி அதற்கு முட்டுக்கட்டை போட்டார்.
வடமாநிலங்களில் இந்தி வழக்காடு மொழியாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழுக்கு அந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்?. இந்திய தேசியம் என்றால், இந்திக்குத்தான் இடம், தமிழுக்கு இடமில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று எடுத்துக்கொள்ளலாமா?. தேசிய ஒருமைப்பாடு பேசுபவர்கள் இதற்குப் பதில் சொல்லட்டும். இந்தியாவை உடைக்கக் கூடியவர்கள் யார் என்பதையும் சிந்தித்துப் பார்க்கட்டும்.
தமிழ்நாடு அரசு வழக்கம்போல், எழுதியிருக்கிறோம்... சொல்லியிருக்கிறோம்.. என்று வெறும் சம்பிரதாய ரீதியாக நடந்து கொள்ளாமல் அண்ணாவை கட்சியின் பெயரில் வைத்துள்ளதற்காவது நாணயமாக நடந்து கொள்ளட்டும். இல்லையேல் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறும் என்று எச்சரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews