சென்னை:
தமிழ்நாட்டு எழுச்சியை அணையாமல் காக்கவேண்டும் என்றும், 11-ந்தேதி தமிழகம் முழுவதும் பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்றும் கி.வீரமணி கூறியுள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தந்தை பெரியார் சிலையை உடைக்கத் தூண்டுதல் செய்தவர்கள் தமிழ்நாட்டு மக்களின் ஏன் உலகெங்கும் உள்ள பகுத்தறிவாளர்களின், நல்லுணர்வாளர்களின் எழுச்சி கண்டு எதிர்ப்புக் கண்டு அஞ்சி நடுங்கி, ஒடுங்கி வருத்தம் தெரிவித்துள்ளனர். 24 மணிநேரத்தில் இந்தியாவே பதற்றம் கொண்டது சாதாரணமானதல்ல; எதற்கும் வாய் திறக்காத பிரதமர் மோடியே 24 மணிநேரத்தில் வாய்த் திறந்துள்ளார்.
என்றாலும், எச்.ராஜா ஒட்டன்சத்திரத்தில் தந்தை பெரியார் பற்றி தவறான தகவலை ஒரு பேட்டியின்மூலம் தெரிவித்துள்ளார். அவர்கள் திருந்தப்போவதில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. வம்பையும் விடப்போவதில்லை.
இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியதென்ன? தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துவதால், திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியதால், நாம் அடங்கி விட்டோமா?, ஆர்த்து எழுந்துவிட்டோமா என்பதைக் காட்டவேண்டாமா? அதை அமைதி வழியில், அறவழியில் ஒன்றுபட்டுக் காட்டுவோம்.
லெனின் சிலை, அண்ணல் அம்பேத்கர் சிலை, தந்தை பெரியார் சிலை என்று குறிவைக்கும் அந்தக் கோணல் புத்திக்காரர்கள் வெளியில் கூறாவிட்டாலும் அதே உணர்வோடு இருக்கக்கூடிய ஆதிக்க மதவாத சக்திகளுக்கு, சமூகநீதி அழிப்பு சக்திகளுக்கு அறிவார்ந்த முறையில் உணர்த்த வேண்டாமா?. எழுந்துள்ள தமிழ்நாட்டு எழுச்சியை அணையாமல் காக்க வேண்டாமா?.
அதன் குறியீடாக வரும் 11-ந்தேதி மாலை தந்தை பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை உள்ள முக்கிய ஊர்களில், அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள், உணர்வாளர்களை ஒருங்கிணைத்து தந்தை பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #tamilnews