செய்திகள்

அரசியல்வாதிகள் நடிக்க ஆரம்பித்ததால் நடிகர்கள் அரசியல்வாதியாக மாறிவிட்டனர்- கி. வீரமணி

தமிழகத்தில் ஆட்சி காட்சியாக உள்ளது, அரசியல்வாதிகள் நடிக்க ஆரம்பித்ததால் நடிகர்கள் அரசியல்வாதியாக மாறிவிட்டனர் என்று கோவில்பட்டியில் கி. வீரமணி பேசியுள்ளார். #kveeramani #actor #politicians

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆட்சி காட்சியாக உள்ளது. ஆட்சியாக இல்லை. டெல்லி ஆட்டுகிறது நாங்கள் ஆடுகிறோம் என்று இன்றை ஆட்சியர்களே வெட்டவெளியாக தயக்கமில்லாமல் சொல்கின்றனர். இந்த நிலை மாறுவதற்கு ஆட்சி மாற்றம் தான் தீர்கமான முடிவு.

அரசியல் வாதிகள் நடிக்க ஆரம்பித்து விட்டதால், நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர். காவிரி நதிநீர் பிரச்சினையில் நமக்கான நீர் குறைந்துள்ளது, தீர்ப்பினை விட அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அமைப்புக்களை உருவாக்க வேண்டும். வரவேற்க்கூடிய அம்சம் என்னவென்றால் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம், கண்காணிப்பு குழு இரண்டையும் மத்தியரசு அமைக்க வேண்டும் என்று கூறியிருப்பது தான்.

தமிழகத்தினைவிட, கர்நாடகாவிற்கு கண்சாடை காட்டினால் ஆட்சிக்கு வரலாமா என்ற நப்பாசை மத்தியரசுக்கு இருக்கிறது. அந்த எண்ணத்தினை மாற்ற வேண்டும். மாநில அரசு தற்போது அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்ட வேண்டும்.

ஒடிசாவில் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகை பாண்டியன் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தாக்கக்கூடிய நிலைக்கு வந்துள்ளார்கள் என்றால் அவர்கள் எப்படிபட்ட காட்டுமிராண்டிகள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த காட்டுமிராண்டி அரசு மீண்டும் தொடரக்கூடாது. இதை மக்கள் உணர வேண்டும். இந்த வி‌ஷயத்தில் மாநில அரசு வழக்கம் போல் மவுனம் காக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews  #kveeramani #actor #politicians

SCROLL FOR NEXT