செய்திகள்

குரங்கணி தீ விபத்து - கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றார் பீட்டர்

குரங்கணி தீ விபத்து தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னை டிரக்கிங் கிளப்பை சேர்ந்த பீட்டர் இன்று போடி கோர்ட்டில் சரணடைந்து நிபந்தனை ஜாமீன் பெற்றார் . #KuranganiForestFire

போடி:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி பகுதிக்கு கடந்த மாதம் சென்னை மற்றும் கோவை, ஈரோட்டைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. இது குறித்து தமிழக அரசு அதுல்யமிஸ்ரா என்பவரை விசாரணை அதிகாரியாக நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவர் தனது தலைமையில் 20 பேரை குரங்கணி மலையேற்ற பயிற்சிக்கு அழைத்து வந்தருந்தார். தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்படவே அவர் தலைமறைவானார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அவர் சென்னையில் டிரக்கிங் கிளப் நடத்தி வந்ததும் அடிக்கடி இணையதளம் மூலம் ஆட்களை சேர்த்து மலையேற்ற பயிற்சிக்கு அழைத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

தன்னை கைது செய்ய தடை விதிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் கோர்ட்டில் சரணடைந்து நிபந்தனை ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தியது. அதன் பேரில் பீட்டர் இன்று போடி நீதித்துறை நடுவர் மன்ற கோர்ட்டில் சரணடைந்தார். மாஜிஸ்திரேட்டு மாணிக்க வாசகம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த விசாரணை வரும் வரை தினசரி குரங்கணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார். #KuranganiForestFire

SCROLL FOR NEXT