குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள வெள்ளிரவெளி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் யுவராணி (12). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியின் பேனா தொலைந்து விட்டது. இது தொடர்பாக அந்த வகுப்பு ஆசிரியை மாணவி யுவராணியை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை அடைந்த யுவராணி வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குன்னத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து யுவராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
யுவராணியின் அண்ணன் கவுதமும் அதே பள்ளியில் தான் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இருவரும் தினமும் ஒன்றாக தான் பள்ளிக்கு செல்வார்கள். சம்பவத்தன்று காலையும் இருவரும் பள்ளிக்கு சென்று இருக்கிறார்கள்.
அப்போது யுவராணி தனது அண்ணனிடம் எனக்கு பசிக்கிறது. நீ முன்னால் செல். நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என கூறி வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.