செய்திகள்

முதன்முறையாக ஏடிபி சேலஞ்சர் லெவல் பட்டத்தை வென்றார் பிரஜ்னேஷ்

தமிழகத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முதன்முறையாக ஏடிபி சேலஞ்சர் லெவன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். #KunmingOpen

சீனாவின் அன்னிங் என்ற இடத்தில் குன்மிங் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இது ஏடிபி சேலஞ்சர் லெவல் தொடராகும். இதில் சர்வதேச முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.

கடந்த 21-ந்தேதியில் இருந்து நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. காலிறுதியில் 3-ம் நிலை வீரரான ஜே தாம்சனையும், அரையிறுதியில் போலந்தின் கமில் மஜ்க்ஸ்ஜக்கையும் வீழ்த்தி பிரஜ்னேஷ் குணேஷ்வரன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் எகிப்தின் முகமது சஃப்வாட்டை எதிர்கொண்டார். முதல் செட்டை கடும் போராட்டத்திற்குப் பின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 5-7 என இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட பிரஜ்னேஷ் , 2-வது செட்டை 6-3 எனவும், 3-வது மற்றும் கடைசி செட்டை 6-1 எனவும் கைப்பற்றி 2-1 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி சேலஞ்சர் லெவல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். சாம்பியன் கோப்பையுடன் 21 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையும், 125 தரவரிசை புள்ளியையும் பெற்றுள்ளார்.

இந்த 150 புள்ளிகளால் உலகத் தரவரிசையில் முதல் 200 இடங்களுக்குள் முன்னேற உள்ளார். இந்த புள்ளிகள் விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் தகுதிச்சுற்றுக்கு முன்னேற உதவி கரமாக இருக்கும். #Prajnesh #KunmingOpen

SCROLL FOR NEXT