விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட செம்மறி ஆடுகள். 
செய்திகள்

மீண்டும் களை கட்ட தொடங்கிய குண்டடம் மாட்டுச்சந்தை

குண்டடம் சந்தையும் மூடப்பட்டதால் விவசாயிகள் ஆடு, மாடுகளை விற்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

குண்டடம்:

கொரோனா ஊரடங்கிற்கு பின்பு குண்டடம் மாட்டுச்சந்தை மீண்டும் களைகட்டத்தொடங்கியது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சனிக்கிழமை தோறும் கூடும்  வாரசந்தையில் அதிகாலை முதல் ஆடு, கோழி சந்தையும் மதியம் முதல் மாட்டுச்சந்தையும்  நடைபெறும்.

சந்தைக்கு குண்டடம், தாராபுரம், காங்கயம், குடிமங்கலம், பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  விவசாயிகளும் வியாபாரிகளும் கால்நடைகளை விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர்.

திருப்பூர், கோவை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மாடுகளை இங்கு வந்து வாங்கிச்செல்கின்றனர். வாரம்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளும், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாடுகளும் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது.

இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு பிறப்பித்ததால் சந்தைகள் மூடப்பட்டன. குண்டடம் சந்தையும் மூடப்பட்டதால் விவசாயிகள் ஆடு, மாடுகளை விற்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் அரசு கட்டுப்பாடுகளுடன் சந்தைகளை திறக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று சனிக்கிழமை குண்டடம் சந்தை திறக்கப்பட்டது.

முதல் வாரம் என்பதால் கால்நடைகள் குறைந்த அளவே விற்பனைக்கு கொண்‌டு வரப்பட்டன. வருகிற 21-ந்தேதி பக்ரீத் பண்டிகை வருவதால் வியாபாரிகள் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனர்.

SCROLL FOR NEXT