செய்திகள்

கும்பகோணத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: போலீசில் புகார்

கும்பகோணத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்படுவதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மாலை மலர்

கும்பகோணம்:

கும்பகோணம், நீலத்த நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வசீகரன். இவரது மனைவி புவனா (வயது 23). இவர்களுக்கு திருமணம் முடிந்து 2 வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில் வசீகரன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். புவனா வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் இருந்த வசீகரனிடம் புவனா வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வசீகரன் புவனாவிடம் உன் வீட்டிலிருந்து 5 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகை வாங்கி வா என்று கூறி வசீகரன் அம்மா ஜோதி மற்றும் உறவினர்கள் ராஜாத்தி, அமுதா, ஆகியோர் இது தொடர்பாக புவனாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து புவனா கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம், செட்டிமண்டபம் நடுத்தோப்பை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரேம் குமார் (வயது 29). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். அப்பகுதியில் வசிப்பவர் வீரையன் இவரது மனைவி ரேவதி.

இந்நிலையில் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வந்த பிரேம் குமார் வீட்டிற்கு பணம் அனுப்புவதற்காக உறவினரான ரேவதி வங்கி கணக்கிற்கு அனுப்பி வீட்டில் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதை ரேவதி அவரது வீட்டில் கொடுக்காமல் இருந்துள்ளார்.

இதையடுத்து வெளிநாட்டில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த பிரேம்குமார் பணம் கொடுக்காத தகவல் அறிந்து ரேவதி வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ரேவதி மற்றும் அவரது கணவர் மற்றும் ஆதரவாளர்கள் 5 பேருடன் கட்டை மட்டும் கம்பியால் தாக்கி பிரேம்குமாரிடம் இருந்து 2 ½ பவுன் செயினை பறித்துள்ளனர். இதில் காயமடைந்த பிரேம்குமார் கும்பகோணம் தாலுகாவில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.