களியக்காவிளை:
குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி ஒக்கி புயல் வீசியது. புயல் தாக்கியதில் கடலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். குமரி மேற்கு மாவட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் இதுவரை கரை திரும்பவில்லை.
இவர்களில் பலரும் கேரள மாநில மீனவர்களுடன் இணைந்து மீன்பிடிக்க சென்றவர்கள். புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய பல மீனவர்களின் உடல்கள் கேரள கடல் பகுதியில் கரை ஒதுங்கியது.
கேரளாவில் கரை ஒதுங்கிய மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு திருவனந்தபுரம், கொச்சி அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பல மீனவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
எனவே மீட்கப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் கேரள அரசு ஆஸ்பத்திரி பிணவறைகளில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த உடல்களை அடையாளம் காண மாயமான மீனவர்களின் உறவினர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.
இதில், குமரி மாவட்டம் குளச்சல் மற்றும் மணக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் ஆண்டனிராஜ் உள்பட 2 பேரின் அடையாளம் டி.என்.ஏ. சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இரவிபுத்தன் துறையைச் சேர்ந்த வில்பிரட் (வயது 55) என்ற மீனவரின் உடல் நேற்று டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த தகவல் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பித்து வில்பிரட் உடலை பெற்றுக் கொள்கிறார்கள். இன்று மாலையே வில்பிரட்டின் உடல் அடக்கம் அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது.
திருவனந்தபுரம் மற்றும் கொச்சி அரசு ஆஸ்பத்திரிகளில் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ள பிணங்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.