நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ள இந்த வேளையில் கோடை வெயிலை தாங்க முடியாமல் அவர்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்றும் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2 அணை பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. சிற்றாறு 2-ல் அதிகபட்சமாக 62 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இரணியல், ஆனைக் கிடங்கு, அடையாமடை, முள்ளங்கினாவிளை, பூதப்பாண்டி ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.
அணைப் பகுதிகளில் கொட்டிவரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 30.30 அடியாக இருந்தது. அணைக்கு 202 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 30.80 அடியாக உள்ளது. அணைக்கு 82 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
குமரி மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.
இதேபோல தென்காசி மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்தது. நேற்று மாலை பாவூர்சத்திரம், கீழப்பாவூர், சாலைப்புதூர், பெத்தநாடார்பட்டி, திப்பணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரை மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அரை மணிநேரம் மிதமான அளவில் மழை கொட்டியது. தென்காசி, குற்றாலம், இலஞ்சி, வல்லம் உள்ளிட்ட இடங்களில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 28-ந் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.