செய்திகள்

ஆட்சி அமைக்க உரிமை - கர்நாடக கவர்னரை சந்தித்தார் குமாரசாமி

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுகொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கோரி கர்நாடக கவர்னரை இன்று மாலை சந்தித்தார். #Kumarasamy #KarnatakaElection2018

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் ஐந்தரை மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 91 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 70 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிள்ளனர்.

பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுகொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பினார்.

இதற்கிடையில், பா.ஜ.க. மாநில தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா, அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாலை சுமார் 5 மணியளவில் கவர்னர் வஜுபாய் வாலா-வை சந்தித்தார்.

சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 7 நாள் அவகாசம் தாருங்கள் என கவர்னரை எடியூரப்பா கேட்டுகொண்டதாக தெரிகிறது.

இந்த சந்திப்பு முடிந்த சில நிமிடங்களில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கோரி கர்நாடக கவர்னரை குமாரசாமி இன்று மாலை சந்தித்தார்.

குமாரசாமியுடன் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் காங்கிரஸ் எம்.எம்.எல்.ஏக்கள் உடன் சென்றிருந்தனர்.

ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை கவர்னரிடம் குமாரசாமி அளித்தார். #Kumarasamy #KarnatakaElection2018