செய்திகள்

உடல்நிலை மோசமடைந்தது: நவாஸ் ஷெரீப் மனைவி மீண்டும் லண்டன் மருத்துவமனையில் அனுமதி

புற்றுநோய்க்காக லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவியின் உடல்நிலை மோசமடைந்ததால் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

லண்டன்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் நவாஸ் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த மாதம் அவர் இங்கிலாந்து சென்றார். அங்கு அவருக்கு மூன்று முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். மூன்றாவது அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நன்றாக தேறியதை அடுத்து கடந்த 22ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான லாகூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குல்சூம் நவாஸ் வெற்றி பெற்றார்.

இந்த உற்சாகத்துடன் விரைவில் பூரண குணமடைந்து நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. எனவே, அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தகவலை டுவிட்டரில் அவரது மகள் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.