செய்திகள்

காஷ்மீரில் 7 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதி தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிப்பு

காஷ்மீரில் 7 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதி தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்து, குல்காம் மாவட்டம் முழுவதும் போலீசார் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். மேலும் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் 1-ந் தேதி ஒரு வேனில் பணத்தை எடுத்துக்கொண்டு 5 போலீசார், வங்கி ஊழியர்கள் 2 பேர் வங்கி கிளைக்கு சென்றனர். அங்கு பணத்தை ஒப்படைத்து விட்டு, 7 பேரும் குல்காமுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, மர்ம நபர்கள் திடீரென வேனை வழிமறித்து அதில் இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 போலீசார் உள்பட 7 பேரும் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் பொறுப்பு ஏற்றது.

இச்சம்பவத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த உமர் மஜித் (வயது 22), இஸ்பக் பல்லா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 7 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி உமர் மஜித் கடந்த ஆண்டு அந்த இயக்கத்தில் சேர்ந்தார். அவர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டும் வந்தார்.

இதையடுத்து உமர் மஜித்தை பிடித்து தருபவர்களுக்கு முதலில் ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது. தற்போது அவருடைய தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு என அறிவித்து குல்காம் மாவட்டம் முழுவதும் போலீசார் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். மேலும் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT