கேஎஸ் அழகிரி 
செய்திகள்

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தக் கூடாது- கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தக் கூடாது என்று கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

கடந்த அக்டோபர் 2016-ல் தமிழகத்தில் நடைபெற வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மூன்றாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் பல்வேறு முறைகேடுகளின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த தேர்தல்களை முறையாக, பாரபட்சமின்றி நடத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2019 மே 31-ந்தேதிக்குள் நடத்த வேண்டுமென ஆணையிடப்பட்டது. அதற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு, அங்கு தமிழக மாநில தேர்தல் ஆணையம் 2019 அக்டோபர் 31-ம் நாளுக்குள் தேர்தல் நடத்தப்படும் என உறுதி கூறியது.

ஆனால், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுமா, நடைபெறாதா என்கிற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களுக்கான தேர்தலில் தலைவர் பதவிகளை நேரடியாக தேர்ந்தெடுக்காமல் மறைமுக தேர்தல் கொண்டு வருவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்படப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு அ.தி.மு.க. அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அனைத்து கட்சிகளையும் கலந்து பேசி, கருத்தொற்றுமை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், அதையும் மீறி அ.தி.மு.க. அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்குமேயானால் அதைவிட ஒரு ஜனநாயகப் படுகொலை வேறு எதுவும் இருக்க முடியாது. ஏற்கனவே, உச்சநீதிமன்றத்தில் எந்த அடிப்படையில் தேர்தலை நடத்துவோம் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் உறுதி கூறியதோ, அந்த அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஓரணியில் திரண்டு அ.தி.மு.க.வை தோற்கடிக்கிற வகையில் வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலை ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. சந்தித்த போது பெற்ற வெற்றி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், அதாவது 1.1 சதவீத வேறுபாட்டில் தான் வெற்றி பெற முடிந்தது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதுபோல, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்ட 39 இடங்களில் 38 இடங்களில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி வெற்றி பெற்றது.

இடைத்தேர்தல்களின் வெற்றி என்பது பணநாயகத்திற்கு கிடைத்த வெற்றியே தவிர, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாக கருத முடியாது.

எனவே, உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடத்தி வருகிற மக்கள் விரோத கொள்கை கொண்ட அ.தி.மு.க.வை வீழ்த்த வேண்டியதை தலையாய பணியாக காங்கிரஸ் கட்சி கருதுகிறது. அதற்காக காங்கிரஸ் கட்சியினர் இன்றிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடிப்படை பணிகளை உடனடியாக துவக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.