கிருஷ்ணகிரி:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கரகூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் நேற்று முன்தினம் தனது மனைவி வாணி மற்றும் மகன் தனுஷ் ஆகியோரை அழைத்து கொண்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
பின்னர் அங்கு சிகிச்சைகள் முடித்து கொண்டு நேற்று மீண்டும் பாலக்கோடு செல்ல சென்னையிலிருந்து ஓகேனக்கல் செல்லும் பேருந்தில் வநதுள்ளனர். பேருந்து கிருஷ்ணகிரி வரும் போது தூக்ககலக்கத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தி அவசரமாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாக ராயக்கோட்டை மேம்பாலம் அருகே இறங்கியுள்ளார்.
அதன் பின்னர் வாணி பஸ் நிலையத்தில் இறங்கிய கணவரை தேடியுள்ளார். பின்னர் போன் செய்து எங்கு உள்ளீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி நான் தூக்ககலக்கத்தில் இறங்கி விட்டேன் அதனால் நீங்கள் பேருந்து நிலையத்தில் பத்திரமாக இருங்கள் நான் வந்து விடுகிறேன் என தெரிவித்துள்ளார். நீண்ட நேரமாகியும் கிருஷ்ணமூர்த்தி வராததால் ஒரு ஆட்டோவில் தேடியுள்ளனர்.
அப்போது கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கிருஷ்ணமூர்த்தி பலியானது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதேபோல் கிருஷ்ணகிரி அருகேயுள்ள குந்தாரப்பள்ளி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி(75). இவர் நேற்று கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகே வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.