கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் - முத்து தம்பதியினர். இவர்களுக்கு 14 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் குப்பத்தில் உள்ள ஒருவருக்கு தனது ஆண் குழந்தையை ரூ. 25 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் 1098 சைல்டு லைன் அதிகாரி பிரசன்னகுமாரி மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில் குழந்தையை விற்றதாக கூறப்படும் குமரேசன் - முத்து தம்பதி தற்போது ஊரில் இல்லாமல் இருந்ததும், அவர்கள் குழந்தையை விற்பனை செய்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறுகையில், வள்ளுவர்புரத்தில் தம்பதி ஒருவர் தங்களின் ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்தினோம். அதில் ஊர் பொதுமக்கள் சிலர் அவர்கள் குழந்தையை ரூ.25 ஆயிரத்திற்கு ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு விற்பனை செய்ததாகவும், தற்போது அந்த தம்பதி ஊரில் இல்லை என்றும் தெரிவித்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.