கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்கள். 
செய்திகள்

கிருஷ்ணகிரியில் கல்யாண பசவேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரியில் கல்யாண பசவேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பழைய பேட்டை பூக்காரத் தெருவில் உள்ள கல்யாண பசவேஸ்வரர் கோவில் ஆவர்த்தன பிரதிஷ்டை மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 2-ம் தேதி மாலை 4.30 மணிக்கு கல்யாண பசவேஸ்வரர் கோவிலில் இருந்து வீரபாத்தியங்களுடன், நந்தி துவஜம் மங்கள இசையுடன் புப்பாட்டு நரசிம்மசுவாமி கோவிலில் இருந்து கங்கை தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மாலை 6 மணிக்கு கங்கை பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை, புண்யாவாசனம், கணபதி ஹோமம், பிரவேச பலி, அங்குரார்ப்பணம் ஆகியவை நடந்தது. 3-ம் தேதி காலை 6 மணிக்கு யாகசாலை, சதுர்துவார பூஜை, கலச பிரதிஷ்டை, பூர்ணகும்ப பிரதிஷ்டை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூணர்ஹுதி, தீபாராதனை ஆகியவை நடந்தது. மாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ருத்ரா ஹோமம், ஜெய ஹோமம் ஆகியவை நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு நட்சத்திர ஹோமம், மகா பூணாஹுதி, வாசுவேதாந்த ஹோமம் ஆகியவை நடந்தது. காலை 10 மணிக்கு காந்தி சிலை அருகில் இருந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ ராஜாபுரா சமஸ்தான மடாதிபதி ஸ்ரீ டாக்டர் ராஜேஸ்வர சிவாச்சார்ய சுவாமிகள், சென்னபசவா ராத்திய ஸ்ரீ சிவாச்சார்ய சுவாமிகள், ஸ்ரீ கரிபசவராஜேந்திர சுவாமிகள், ஸ்ரீ தேஜஸ் லிங்க சிவாச்சார்ய சுவாமிகள் ஆகியோரை வெள்ளி பல்லக்கில், கும்ப மரியாதையுடன் வீர வாத்தியங்கள் முழங்க கோவிலுக்கு அழைத்து வந்தனர். 

பின்னர் 10.30 மணிக்கு மகாகும்பாபிஷேகம், மகாஅபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை, மங்கள ஆர்த்தி, தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. 11 மணிக்கு பஞ்சமுக ருத்திராட்சை அணிதல் நிகழ்ச்சியும், 12 மணிக்கு குருக்களால் சொற்பொழி நிகழ்ச்சியும் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா மற்றும் வீரசைவ லிங்காயத் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.