கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக சிக்கன நாள் விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.
இதில், 2016 - 17ம் நிதியாண்டில் வசூல் நிலையில் சிறந்து விளங்கிய சிறு சேமிப்பு முகவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் கதிரவன் வழங்கினார். கலெக்ரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) ராஜசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சுப்பாராவ் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது:-
சிறுசேமிப்பு என்பது நமது நாட்டில் மிக முக்கியமான பணியாக உள்ளது. மேலை நாடுகளில் சிறுசேமிப்பு என்ற திட்டமே இல்லை. மாணவர்களும் பொதுமக்களும் தங்களுடைய பணத்தை வீட்டில் வைக்காமல் வங்கிகளிலோ, அஞ்சலகங்களிலோ பாதுகாப்பாக வைப்பு தொகையாக வைத்தால் நம்முடைய பணத்திற்கு பாதுகாப்பும், வட்டியும் வரும். மாணவர்கள் சிறுவயது முதலே சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறு வயது முதலே சேமிப்பு வைத்தால் மாணவர்கள் உயர் கல்வி படிக்கும் போதும், தம் குடும்ப செலவிற்கும் இச் சேமிப்பு உதவும். அஞ்சல் துறையில் சேமித்து வைத்தால் வட்டியும் கூடுதலாக கிடைக்கும்.
மாவட்டத்தில் 2016 -2017 ஆம் நிதியாண்டில் ரூ.93 கோடியே 31 லட்சத்து 49 ஆயிரத்து 446 ரூபாய் சேமிப்பு இலக்கு எட்டப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ரூ. 120 கோடி அளவிற்கு இலக்கிணை அடைய சிறுசேமிப்பு முகவர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி சிறுசேமிப்பு அலுவலர் செல்லதுரை, அஞ்சல் உதவி கண்காணிப்பாளர் ஸ்வாகத்ராய், அஞ்சல் உதவி ஆய்வாளர் ரவிசந்திரன், ரெஜிலா, சிறுசேமிப்பு முகவர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர். #tamilnews