சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், பயணிகளின் விரைவு பயணத்துக்காக ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.
கோயம்பேடு - ஆலந்தூர் சின்னமலை முதல் விமான நிலையம் வரையில் உயர்மட்ட பாதையில் முதற்கட்டமாக மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
2-வது கட்டமாக திருமங்கலம் முதல், நேரு பூங்கா வரையில் 7.5 கி.மீட்டர் தூரம் பூமிக்கடியில் சுரங்கப்பாதை ரெயில் பணிகள் நடந்து முடிந்துள்ளன. சோதனை ஓட்டம் நடத்தி அதிகாரிகள் ஆய்வு செய்து சுரங்க ரெயில் ஓட்ட அனுமதி அளித்துள்ளனர்.
திருமங்கலம், அண்ணா நகர், செனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேருபூங்கா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட ரெயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
முற்றிலும் நவீன முறையில் கட்டப்பட்ட இந்த ரெயில் நிலையங்களில் உயர்தர குளிர்சாதன வசதிகள், காற்றோட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை உள்பட பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க மத்திய- மாநில அரசுகளின் அனுமதி கோரப்பட்டது.
வருகிற 14-ந்தேதி முதல் சுரங்க மெட்ரோ ரெயில் ஓடும் என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்கள்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
நேரு பூங்கா முதல் சென்ட்ரல் வரையிலான சுரங்கப்பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 2018-ல் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் ஓடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கூறியதாவது:-
மெட்ரோ ரெயில் சுரங்க திட்டப்பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திருமங்கலம்- நேரு பூங்கா வரையில் சுரங்க ரெயில் பணிகள் நிறைவடைந்துள்ளது. பயணிகள் சேவைக்காக விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. மத்திய-மாநில சார்பில் திறப்பு விழா தேதி உறுதியானதும் மெட்ரோ ரெயில் ஓடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மெட்ரோ சுரங்க ரெயில் விரைவில் ஓட உள்ளதையொட்டி அண்ணாநகர், அமிஞ்சிகரை, கீழ்ப்பாக்கம் பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.