மரணம் 
செய்திகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் டயரில் சிக்கி முதியவர் பலி

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் டயரில் சிக்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

போரூர்:

கோயம்பேடு பஸ் நிலைய 2-வது பிளாட்பாரத்தில் இருந்து இன்று அதிகாலை வெளியூர் பஸ் ஒன்று கிளம்பி சென்றது. அப்போது அங்கு 50வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை நசுங்கி இறந்து கிடந்தார். இதைக்கண்ட பயணிகள் போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார் ? அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் ? விபத்து ஏற்படுத்திய பஸ் எது ? என்கிற விபரம் ஏதுவும் தெரியவில்லை,

பிளாட்பாரத்தில் படுத்து உறங்கியவர் அதிகாலை நேரம் தூக்க கலக்கத்தில் பிளாட்பாரத்தில் இருந்து தவறி விழுந்து பஸ் டயரில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.