கோயம்பேடு பஸ் நிலையம் 
செய்திகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் செல்போன் பறித்த வாலிபருக்கு தர்ம அடி

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

மாலை மலர்

போரூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவித்ரா (26) இவர் அம்பத்தூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சொந்த ஊர் சென்ற பவித்ரா பஸ் மூலம் கோயம்பேடு வந்தார்.

பின்னர் செல்போனில் பேசியபடியே மாநகர பஸ் நிலையம் நோக்கி பவித்ரா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென பவித்ராவின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினான்.

அதிர்ச்சி அடைந்த பவித்ரா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் செல்போன் பறித்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து பஸ் நிலைய போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிந்தது. அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல் கே.கே. நகர், அசோக் நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பணி முடிந்து தனியாக வீடு திரும்பி செல்பவர்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது.

அசோக் நகர் உதவி கமி‌ஷனர் பிராங்க் ரூபன் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. செல்போன் பறிப்பு நடைபெற்ற இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாண்டு கார்த்திக், கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள் 1 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிளை திருடி அதன் மூலம் செல்போன் பறிப்பதும் பின்னர் அந்த மோட்டார் சைக்கிள்களை தனித்தனி பாகங்களாக பிரித்து புதுப்பேட்டையில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.