மரக்கடை தீப்பற்றி எரிந்த காட்சி. 
செய்திகள்

கோவில்பட்டி அருகே மரக்கடையில் தீ விபத்து

கோவில்பட்டி அருகே மரக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது.

மாலை மலர்

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளம் புதூரில் முத்தையா என்பவருக்கு சொந்தமான மரக்கடை இயங்கி வருகிறது. இந்த மரக்கடையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகையுடன் மளமளவென தீப்பிடித்து எரிவதை கண்ட அருகில் இருந்தவர்கள் புதூர் காவல்நிலையத்திற்கும், விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்த போராடினர். ஆனால் தீ மளமளவென பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் சிரமப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கோவில் பட்டி தீயணைப்பு நிலையத்தில் இருந்து மற்றொரு தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். திடீரென‌ தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் டிராக்டர் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் கடையில் இருந்த தேக்கு, வாகை உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உட்பட பல லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்கள் எரிந்து சேதமடைந்தது.

மேலும் இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.