கோப்பு படம் 
செய்திகள்

கோவில்பட்டியில் கோர விபத்து: லாரி மீது கார் மோதி தாய்-மகன்கள் உள்பட 4 பேர் பலி

கோவில்பட்டியில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய்-2 மகன்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.

மாலை மலர்

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த அத்தைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் அழகு லட்சுமணன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (வயது 45). இவர்களுக்கு மகேந்திரன் (16), மாரிச்செல்வன் (13), நாகராஜன் (3) ஆகிய 3 மகன்கள் இருந்தனர்.

அங்குள்ள பள்ளியில் மகேந்திரன் பிளஸ்-1, மாரிச்செல்வன் 8-ம் வகுப்பும் படித்தனர். நாகராஜன், அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தான்.

நேற்றுமுன்தினம் சித்ரா, கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி கிராமத்தில் நடந்த உறவினர் இல்ல விழாவுக்கு குழந்தைகளுடன் செல்ல திட்டமிட்டார். பஸ்கள் இயக்கப்படாததால், சித்ரா தன்னுடைய கணவரின் நண்பரான, கோவில்பட்டியை அடுத்த இனாம் மணியாச்சியை சேர்ந்த ரமேஷ் பாண்டியனின் (25) காரில் குழந்தைகளுடன் இலுப்பையூரணிக்கு சென்றார். ரமேஷ் பாண்டியன், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

இரவு 10.30 மணியளவில் விழா முடிந்ததும், அங்கிருந்து சித்ரா தன்னுடைய குழந்தைகளுடன் காரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த காரை ரமேஷ் பாண்டியன் ஓட்டி வந்தார்.

கோவில்பட்டி-இளையரசனேந்தல் ரோடு பகுதியில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த டிப்பர் லாரியின் பின்புறம் கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது. இதில் ரமேஷ் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சித்ரா, மாரிச்செல்வன், நாகராஜன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மகேந்திரனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.