நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர் 5 அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தி 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை, கூடங்குளம் கடற்கரை வழியாக வந்த ஒரு வாலிபர் கடற்கரையில் உள்ள அணுமின்நிலையத்தின் உயரமான சுற்றுச்சுவரை ஏறிக்குதித்து அணுமின் நிலைய வளாகத்துக்குள் நுழைந்தார். அவர் வழக்கமான ஊழியர்களுக்கான சீருடையில் இல்லாமல் தன்னந்தனியாக சுற்றித் திரிவதை பார்த்த பாதுகாப்பு படையினர், அவரை பிடித்து கைது செய்தனர்.
அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் உத்தரபிரதேசம் மாநிலம் வாக்சின்பூர் மாவட்டம் படேரியா கிராமத்தை சேர்ந்த நந்தலால் என்பவரது மகன் நரேந்திரகுமார் (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரித்தபோது, தனக்கு வேலை இல்லை என்றும், வயிறு பசிப்பதால் அங்கு ஏதாவது கிடைக்குமா? என்று வந்ததாக கூறியுள்ளார்.
இந்தியில் பேசிய நரேந்திரகுமார், பாதுகாப்பு படையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இதனால் அவரை பாதுகாப்பு படையினர் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக 188, 447 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து நேற்று மாலையே வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வாலிபர் நரேந்திரகுமார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.