செய்திகள்

கூடங்குளத்தில் 2-வது அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளத்தில் இன்று அதிகாலை தொழில் நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதை சரி செய்ய என்ஜினீயர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசின் அணுமின் நிலையம் உள்ளது. இங்கு 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு சுமார் 1800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. முதலாவது அணு உலையில் தற்போது பராமரிப்பு பணிகள் முடிந்து 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

2-வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு கடந்த 20-ந்தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

நேற்று வரை 2-வது அணு உலையில் சுமார் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 5.50 மணிக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதை சரி செய்ய என்ஜினீயர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

இதனால் முதல் அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மட்டும் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்பட்டு தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. 3-வது, 4-வது அணு உலை கட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.