கைது 
செய்திகள்

கொல்லிமலையில் விவசாயிடம் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது

கொல்லிமலையில் விவசாயிடம் பணம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேந்தமங்கலம்:

கொல்லிமலை அடிவாரம் முள்ளுக்குறிச்சி அருகே உள்ள சின்னசெக்கடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). விவசாயி. கடந்த 30-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற அவரை 3 வாலிபர்கள் வழிமறித்து ரூ.6 ஆயிரத்தை மிரட்டி பறித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து செல்வராஜ் செங்கரை போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று செல்வராஜ், தன்னிடம் பணம் பறித்து சென்ற 3 வாலிபர்களை கொல்லிமலை சோளக்காடு பகுதியில் பார்த்தார். உடனடியாக அவர் செங்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (25), பழையபேட்டையை சேர்ந்த சாகுல் அமீது (21), பெத்தநாயக்கன்பாளையம் பெரிய கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கபிலன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.