செய்திகள்

தென்ஆப்பிரிக்காவின் ‘டி20 குளோபல் லீக்’ தொடர் அணியை வாங்குகிறார் ஷாருக் கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் நடத்த இருக்கும் ‘டி20 குளோபல் லீக்’ தொடரில் ஒரு அணியை வாங்க இருக்கிறார்.

மாலை மலர்

பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக் கான். இவர் ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக உள்ளார். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் ‘கரிபீயன் பிரிமீயர் லீக்’ தொடரில் ஒரு அணியை வாங்கினார்.

தற்போது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் டி20 குளோபல் லீக் தொடரை நடத்த இருக்கிறது. இதற்கான அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஜேகன்னஸ்பார்க் நகரத்தை மையமாக வைத்து இரு அணிகளும், கேப்டவுண் நகரை மையமாக வைத்து இரண்டு அணிகளும், புளோயம்போன்டீன், ப்ரேடெரியா, போர்ட் எலிசபெத், டர்பன் ஆகிய நகரங்களை மையமாக வைத்து தலா ஒரு அணி என 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளது.

இதில் கேப்டவுண், ஜோகன்னஸ்பர்க் நகரங்களை மையமாக வைத்து செயல்பட அணிகளில் ஒன்றை வாங்க ஷாருக் கான் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஷாருக் கானின் ஸ்போர்ட்ஸ் மானேஜ்மென்ட் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் கேப்டவுண் மற்றும் ஜோகன்னஸ்பர்க் நகரத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் அணிக்கு தலா 50 மில்லியன் டாலர் (10 ஆண்டுக்கு) விலை நிர்ணயித்துள்ளது. மற்ற நகர அணிகளுக்கு 30 மில்லியன் டாலர் (10 ஆண்டுக்கு) விலை நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு அணியும் வீரர்களை வாங்க தலா 1.5 மில்லியன் டாலர் (சுமார் 10 கோடி ரூபாய்) செலவழிக்க அனுமதி வழங்கப்பட இருக்கிறது. ஐ.பி.எல். தொடரில் இந்த தொகை 66 கோடி ரூபாயாகும்.

டி20 குளோபல் லீக்கில் பங்கேற்கும் அணிகள் வருகிற 19-ந்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது.