சென்னை:
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கநகை கொள்ளை தொடர்பாக கொள்ளையன் நாதுராமைத் தேடி சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்டபோது ஆய்வாளர் பெரியபாண்டி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
தப்பியோடிய நாதுராம் ஒரு மாத கால தேடுதல் வேட்டைக்குப்பிறகு குஜராத்தில் கைது செய்யப்பட்டான். அதன்பின்னர் ராஜஸ்தான் கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து தமிழக போலீசாரிடம் நாதுராம் ஒப்படைக்கப்பட்டான். அவனை தனிப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், கொளத்தூர் கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று பரிசீலித்த நீதிமன்றம், கொள்ளை வழக்கு தொடர்பாக நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகள் தினேஷ், பக்தாராம் ஆகிய மூவரையும் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. #tamilnews