செய்திகள்

கொளத்தூர் டாக்டர் கொலையில் உறவினர்கள் 3 பேர் கைது

கொளத்தூர் டாக்டர் கொலையில் உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மாதவரம்:

கொளத்தூர், பூம்புகார் நகர் 2-வது பிரதான சாலையில் வசித்து வருபவர் நாகராஜன். இவரது மகன் டாக்டர் ராஜேஷ்குமார் (வயது 26). இவர்களது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர். ராஜேஷ் குமார் முகப்பேர் மேற்கு பகுதியில் கிளினிக் மற்றும் மருந்து கடை நடத்தி வந்தார்.

டாக்டர் ராஜேஷ்குமாருக்கும் காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நாளை (3-ந் தேதி) திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் காரைக்குடியில் நடைபெறுவதாக இருந்தது.

கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜேஷ்குமார் திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில் 30-ந் தேதி மாலை கொளத்தூர் பூம்புகார்நகர் அருகே உள்ள குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான தரைமட்ட குடிநீர் தொட்டியில் உடல் அழுகிய நிலையில் ராஜேஷ் குமார் பிணமாக மீட்கப்பட்டார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இது குறித்து கொளத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ராஜேஷ் குமாரை அடித்து கொன்றது அவரது உறவினர்களான மகேந்திரன் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது.

சொத்து தகராறில் கொலை நடந்து இருப்பதாக தெரிகிறது. ராஜேஷ்குமார் மாயமானது குறித்து அவரது பெரியப்பா மனோகரன் போலீசில் புகார் செய்து இருந்தார். தற்போது கைதான மகேந்திரன், புகார் செய்த மனோகரனின் மகன் ஆவார்.

கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலைக்கான காரணம் குறித்து பிடிபட்ட 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

டாக்டர் கொலையில் உறவினர் 3 பேர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.