சேலம்:
சேலம் கருங்கல்பட்டி வடக்கு முனியப்பன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் சந்தியா. இவரது உறவினர் வக்கீல் ரமேஷ் என்பவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டுக்கு இன்று காலை கிரகப்பிரவேச நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சந்தியா இன்று அதிகாலை 4-30 மணிக்கு கோலம் போட்டுக் கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியே மொபட்டில் வந்த வாலிபர் திடீரென்று சந்தியா கழுத்தில் கத்தியை வைத்து கொன்று விடுவதாக மிரட்டினார். பின்னர் அவரது கழுத்தில் உள்ள செயினை பறித்தார். ஆனால் செயினை அவர் கெட்டியாக பிடித்து கொண்டு கொள்ளையனுடன் போராடினார். சத்தமும் போட்டார்.
உடனே அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனால் கொள்ளையன் செயினில் உள்ள டாலரை மட்டும் பறித்து கொண்டு தான் வந்த மொபட்டில் தப்பி சென்று விட்டார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசில் சந்தியா புகார் செய்து உள்ளார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
சந்தியாவிடம் நகையை பறித்த கொள்ளையன் செயின் பறிப்பதற்கு முன்பு களரம்பட்டி மெயின் ரோட்டில் நின்று இருந்ததை அந்தப்பகுதி மக்கள் பார்த்து உள்ளனர். இதனால் அங்கு உள்ள செவ்வாய்ப்பேட்டை காவல் உதவி அருகே வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் அவனது உருவம் பதிவாகி உள்ளது.
மேலும் கொள்ளையன் மொபட்டில் தப்பிசென்றது அருகே உள்ள வீரசைவ ஜங்கம குல திருமண மண்டபத்தின் முன்பு வைக்கப்பட்டு இருந்த காமிராவிலும் பதிவாகி உள்ளது. அந்த காமிரா பதிவுகளை வைத்து போலீசார் கொள்ளையனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த செயின் பறிப்பு சம்பவத்தால் அந்தப்பகுதியில் பீதி நிலவுகிறது.
கருங்கல்பட்டியில் அதிகாலை மற்றும் பிற்பகலில் மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் வரும் கொள்ளையர்கள் களரம்பட்டி மெயின்ரோடு, வடக்கு முனியப்பன் கோவில் தெரு, செங்கல்பட்டி தெரு ஆகிய பகுதிகளில் அடிக்கடி செயினை பறித்து விட்டு செல்கிறார்கள். இது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நடந்து வருகிறது. இனி மேலாவது போலீசார் அதிக அளவில் இந்தப்பகுதிகளில் அடிக்கடி ரோந்து வந்து செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.