நீலகிரி:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 24-ந்தேதி கொள்ளை கும்பல் உள்ளே புகுந்த போது அவர்களை தடுத்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என போலீசாரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே கார் விபத்தில் பலியானார். இவரது சாவில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் கூறினர். எனினும் அவர் விபத்தில் பலியானதாக கூறி வழக்கு முடிக்கப்பட்டது.
அதேநாளில் இவ்வழக்கில் தேடப்பட்ட மற்றொருவராக சயன் பாலக்காடு அருகே குடும்பத்தோடு கார்விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சயனின் மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோர் பலியாகினர். சயன் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
கொடநாடு காவலாளி ஓம்பகதூர், கார் டிரைவர் கனகராஜ், சயனின் மனைவி, மகள் ஆகியோரின் அடுத்தடுத்து மரணங்களால் கொடநாடு எஸ்டேட்டில் பீதி நிலவியது.
இதனால் ஜெயலலிதா ஆவி பழி வாங்குவதாக அப்பகுதியில் வதந்தி பரவியது. மேலும் கொடநாடு எஸ்டேட்டில் இரவில் மர்மமான முறையில் சத்தம் கேட்பதாகவும் பீதி ஏற்பட்டது.
இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் மீண்டும் ஒரு மரணம் ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
கொடநாடு எஸ்டேட் அலுவலகத்தில் கணினி ஊழியராக பணியாற்றி வந்த தினேஷ்குமார் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் கொடநாடு எஸ்டேட் அலுவலகத்தில் கணினி ஊழியராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இவரை நேற்று மதியம் சுயநினைவில்லாத நிலையில் உறவினர்கள் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், தினேஷ்குமார் இறந்து விட்டதாக கூறினர். அவர் தூக்கில் தொங்கியதற்கான அடையாளங்கள் இருப்பதை கண்டனர்.
தகவலறிந்து போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது தினேஷ்குமார் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.
தினேஷ்குமாருக்கு கடந்த சில நாட்களாக கண்ணில் குறைபாடு இருந்துள்ளது. அவர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்காக விடுமுறையில் இருந்த அவர் கடந்த 1-ந்தேதி பணிக்கு சென்றார். ஆனால் கண்பார்வை மங்கலாக தெரிந்ததால் அவரால் பணி செய்யமுடியவில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் கூறினர்.
தினேஷ்குமார் கொடநாடு பங்களாவில் முக்கிய பிரிவான கணினி பிரிவில் பணியாற்றி வந்தார். எனவே அவருக்கு பங்களா ரகசியம் குறித்து தெரிந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இதனால் ஏதாவது ரகசியத்தை வெளியில் சொல்லி விடுவார் என்று யாரேனும் அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 4 பேர் மரணத்தால் ஆவி வதந்தி பரவி உள்ள கொடநாடு எஸ்டேட்டில் தற்போது கணினி ஊழியர் மர்ம மரணத்தால் பெரும் பீதி அப்பகுதி மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. ஆவி பழி வாங்குவது உறுதியாகி விட்டதாக வதந்தி பரவி வருகிறது.
தொடரும் மர்ம மரணங்களால் போலீசாரும் திகிலில்தான் உள்ளனர்.