கத்தி வெட்டு 
செய்திகள்

வேலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கத்தியால் வெட்டிய வாலிபர்கள்

வேலூர் அருகே பட்டப்பகலில் பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவியை 2 வாலிபர்கள் கையை பிடித்து இழுத்து ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் அடுத்த துத்திபட்டை சேர்ந்த மாணவி பென்னாத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று காலை மாணவி பள்ளிக்கு தனியாக நடந்து சென்றார். கேசவபுரம் என்ற இடத்தில் சென்றபோது 2 வாலிபர்கள் மாணவியை வழி மறித்து கையை பிடித்து இழுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அப்போது வாலிபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் மாணவிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

வலியால் துடித்த அவர் அங்கிருந்து அலறி அடித்து தப்பி ஓடினார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

எதற்காக மாணவியை வழிமறித்து வெட்டினர் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் பள்ளிக்கு சென்ற மாணவியை வழி மறித்து கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் வேலூர் கோட்டை பூங்காவில் காதலனை தாக்கி கத்தி முனையில் இளம்பெண்ணை 3 பேர் கற்பழித்த சம்பவம் நடந்த நிலையில் தற்போது மாணவியை நடுரோட்டில் வெட்டிதாக்கியுள்ள சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.