செய்திகள்

புதுவை கவர்னர் கிரண்பேடியின் டுவிட்டர் பக்கம் திடீர் முடக்கம்: சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

புதுவை கவர்னர் கிரண்பேடியின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது பாகிஸ்தான் நாட்டின் சதி வேலையா என்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்ற நாள் முதல் சமூக வலை தளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலம் பொதுமக்களிடம் நேரடி தொடர்பில் இருந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தன்னுடைய சுற்றுபயண விவரம், பங்கேற்கும் நிகழ்ச்சிகள், அறிக்கைகள், கருத்துக்கள், விழா உரைகள் ஆகியவற்றை பதிவு செய்து வருகிறார். மேலும், ஆளும் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான விமர்சனங்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஊழல், முறைகேடுகள், நிர்வாக தவறுகள் குறித்து புகார் செய்ய கவர்னர் மாளிகை தனி ‘‘வாட்ஸ் அப்’’ நெம்பரையும் வெளியிட்டுள்ளது. இதில் வரும் புகார்களுக்கு கவர்னர் கிரண்பேடி நடவடிக்கை எடுப்பதோடு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் மத்திய பிரதேசம் மாநில இந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க கவர்னர் கிரண்பேடி சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்றார். இந்தூர் விமான நிலையத்தில் இறங்கி செல்போன் சுவிட்ச் ஆன் செய்த போது புரோதர்க்கீஸ் பாகிஸ்தான் என்ற பெயரில் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து கவர்னர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட தகவலை வாட்ஸ் அப்பில் தெரிவித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 2010-ம் ஆண்டு முதல் டுவிட்டர் கணக்கு தொடங்கி அதில் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இந்தூர் விமான நிலையத்தில் நேற்று மாலை எனது செல்போனை இயக்கிய போது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது. டுவிட்டர் பக்கத்துக்குள் நுழைய முடியவில்லை.

அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து டுவிட்டர் இந்தியா நிறுவனத்துக்கு புகார் அனுப்பியுள்ளேன். மேலும் சைபர் கிரைம் போலீசாரும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இவ்வாறு கிரண்பேடி கூறியுள்ளார்.

கிரண்பேடியின் டுவிட்டர் பக்கத்தை 25,200 பேர் தொடர்ந்து வருகின்றனர். 4,531 பதிவுகளை இதுவரை அவர் பதிவு செய்துள்ளார். 1,978 பேர் அவரது பழக்கத்தை விரும்புகின்றனர். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் பலர் அவரது பக்கத்தில் தொடர்பில் உள்ளனர்.

கவர்னரின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது பாகிஸ்தான் நாட்டின் சதி வேலையா? என்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews