செய்திகள்

போலி முகவரி கொடுத்து புதுவையில் கார் வாங்கும் நடிகர் - நடிகைகள்: நடவடிக்கைக்கு கவர்னர் உத்தரவு

போலி முகவரி கொடுத்து கார் பதிவு செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய புதுவை கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள் இந்த உயர்ரக கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கார்களின் விலை சுமார் ரூ.80 லட்சம் முதல் ரூ.2½ கோடி வரை ஆகும்.

இந்த கார்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான வரி வசூலிக்கப்படுகிறது. நாட்டிலேயே புதுவை மாநிலத்தில் தான் கார்களுக்கான வரி குறைவாக உள்ளது. ஒரு சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படுகிறது.

இதனால் கார்களை வாங்கும் நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் புதுவையில் பதிவு செய்கின்றனர். இதன்மூலம் அவர்களுக்கு பல லட்சம் வரிப்பணம் மீதமாகிறது.

கார்களை பதிவு செய்ய புதுவையில் தங்கி இருப்பது போன்ற முகவரி வேண்டும். இதற்காக கார்களை பதிவு செய்வோரின் பெயரில் வாடகை வீடு பதிவாகும். இதனையடுத்து பிராமண பத்திரம் தயாரிக்கப்படும்.

வாகன பதிவுக்காக பார்ம்-4-ல் விவரங்கள் பூர்த்தி செய்யப்படும். மேலும் கூடுதல் ஆவணமாக சம்பந்தப்பட்டவர் பெயரில் புதுவை முகவரியுடன் கூடிய இன்சூரன்சும் எடுக்கப்படும்.

இந்த முறைப்படி பல ஆண்டுகளாக புதுவை மாநிலத்தில் வாகன பதிவு நடக்கிறது. இதன் மூலம் புதுவை அரசுக்கு வருமானமும் கிடைக்கிறது.

போக்குவரத்து துறையை பொருத்தமட்டில் ஆவணங்கள் இருந்தால் கார்கள் பதிவு செய்யப்படும். இதேபோல் நடிகை அமலாபாலும் புதுவையில் உயர்ரக காரான “பென்ஸ் எஸ் கிளாஸ்” காரை பதிவு செய்துள்ளார்.

இந்த காருக்கு புதுவை திலாஸ்பேட்டை செயின்ட் தெரசா நகர் என்ற முகவரியை அளித்துள்ளார். இந்த முகவரியில் நடிகை அமலாபாலின் உறவினர் ஒருவர் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

புதுவைக்கு வரும்போது நடிகை அமலாபால் இந்த முகவரியில் தங்குவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த காரை கேரள மாநிலத்தில் பதிவு செய்தால் ரூ.23 லட்சம் வரை வரியாக செலுத்த வேண்டும். புதுவையில் ஒரு சதவீத வரி என்பதால் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மட்டுமே வரியாக செலுத்தி உள்ளார்.

காரை நடிகை அமலா பால் புதுவையில் பதிவு செய்திருந்தாலும் அந்த காரை கேரளா மாநிலத்திலேயே நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் தொடர்பாக சமீபத்தில் கேரள மாநில போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுவை முகவரியில் கார் பதிவு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் கேரள இயக்குனர் பாசிலின் மகன் பகத் பாசிலும் புதுவையில் பதிவு செய்த காரை பயன்படுத்தி வருகிறார். பகத் பாசில் புதுவை லாஸ்பேட்டை புதுப்பேட் 2-வது குறுக்கு தெரு என்ற முகவரியை அளித்துள்ளார்.

இவர்களை போல ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த பல நடிகர் நடிகைகளும், தொழில் அதிபர்களும் காரை புதுவையில் பதிவு செய்துள்ளனர்.

போலி ஆவணம் மூலம் வாகனம் பதிவு செய்தது உறுதி செய்யப்பட்டால் 7 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்க சட்டத்தில் இடமுள்ளது. இதுதொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது.

கார்கள் மட்டுமல்லாது ஆம்னி பஸ்கள், படுக்கை வசதி உள்ள ஆம்னி பஸ்கள் தமிழகம் மட்டுமல்லாது வடமாநிலங்களிலும் புதுவை பதிவெண்களில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிய ஆம்னி பஸ்களுக்கு பெர்மின் வழங்கப்படுவதில்லை.

போலி முகவரி கொடுத்து கார் பதிவு செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி கூறியதாவது:-

பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுவையில் போலி முகவரி கொடுத்து வாகனம் வாங்குவது நீண்டகாலமாக நடப்பது உறுதியாகி உள்ளது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பு தமிழகத்துக்கோ, கேரளத்துக்கோ அல்ல. அது நாட்டுக்கே வருவாய் இழப்பு.

இதுபோன்ற தவறுகளை தடுக்க வேண்டும். தற்போதைய விவகாரங்கள் தொடர்பாக 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க போக்குவரத்து துறை செயலாளருக்கும், ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

குறிப்பாக நடிகை அமலாபாலுக்கு புதுவையில் இருப்பதற்கான ஆவணமும், அம்முகவரியுடன் கூடிய இன்சூரன்ஸ் நகலும் எப்படி வழங்கப்பட்டது? இதேபோல் வேறு திரை நட்சத்திரங்கள் புதுவையில் விலை உயர்ந்த கார்கள் வாங்கியுள்ளார்களா என்பதை விசாரித்து சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய எஸ்.எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளேன்.

கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த வி‌ஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து வரியை வசூலிக்க வேண்டும்.