செய்திகள்

பெங்களூரை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி: சந்தீப்சர்மாவுக்கு மேக்ஸ்வெல் பாராட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று 43-வது ‘லீக்’ ஆட்டத்தில் பெங்களூரை பஞ்சாப் விழ்த்தியது. இதில் சிறப்பாக பந்து வீசிய சந்தீப்சர்மாவுக்கு மேக்ஸ்வெல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

ஐ.பி.எல். போட்டியில் நேற்று இரவு பெங்களூரில் நடந்த 43-வது ‘லீக்’ ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 14 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீழ்த்தியது.

முதலில் விளையாடிய பஞ்சாப் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய பெங்களூர் 19 ஓவரில் 119 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

சந்தீப்சர்மா, அக்‌ஷர் பட்டேல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பஞ்சாப் பெற்ற 5-வது வெற்றி (10 ஆட்டம்) இதுவாகும். இதனால் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் கூறியதாவது:-

நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அக்‌ஷர் பட்டேல் கடைசி கட்டத்தில் ரன் குவித்து நல்ல ஸ்கோரை கொடுத்தார். எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். சந்தீப்சர்மா அற்புதமாக பந்துவீசினார்.

அவர் வீராட்கோலி, கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றியது சிறந்த செயல்பாடு. நாங்கள் இன்னும் வலுவான ஆட்டத்தை வெளிபடுத்த விரும்புகிறோம் என்றார்.

பெங்களூர் கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

இதுபோன்ற ஆட்டத்தை என்ன சொல்வது என்று தெரியவில்லை. எங்களது பேட்டிங் எடுபடவில்லை. மொத்த அணியும் நன்றாக விளையாட முயற்சித்தும் பெரிய ஸ்கோரை எடுக்க முடியவில்லை. விக்கெட்டுகள் சீக்கிரமாகவே வீழ்ந்து விடுகின்றன.