ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 44). இவர் நேற்று இரவு தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஓமலூரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அதுபோல் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி பகுதியை சேர்ந்த மணி (வயது 40) என்பவர் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
2 மோட்டார் சைக்கிள்களும் அதிவேகமாக ஆட்டுக்காரனூர் என்ற இடத்தில் சென்றபோது, எதிரெதிரே நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் தனபால், மணி ஆகிய இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரையும் அக்கம், பக்கத்தில் வசித்து வரும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் தனபால் சேலத்தில் உள்ள ஒரு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த மணி ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
எனினும் அவரது உடலை நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவசர வார்டில் அனுமதிக்கப்பட்ட மணி கொஞ்சம் நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பலியான 2 பேரும் விவசாய கூலி தொழிலாளர்கள் என்பதும், 2 பேரும் சொந்த வேலை காரணமாக சென்றபோது பலியாகி விட்டதும் தெரியவந்தது.