செய்திகள்

முத்துப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கொலை செய்ய முயற்சி

முத்துப்பேட்டை அருகே முன்விரோத தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (32). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர். நேற்று மதியம் திருத்துறைப் பூண்டியில் கட்சி சார்பில் நடந்த நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு மாலை முத்துப்பேட்டை வழியாக மீனாட்சிசுந்தரம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மேலநம்மங்குறிச்சி பாமணி ஆறு பாலம் அமருகே அரிவாளுடன் நின்று கொண்டிருந்த அத்திவெட்டியை சேர்ந்த பெரியசாமி மற்றும் சிலர் பைக்கை வழிமறித்தனர். இதனையடுத்து தன்னை அரிவாளால் வெட்ட வருவதை அறிந்து பைக்கிலிருந்து கீழே குதித்த மீனாட்சிசுந்தரம் உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பியோடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தார். இதனால் ஏமாற்றமடைந்த பெரியசாமி தரப்பு ஆத்திரம் அடைந்து மீனாட்சிசுந்தரத்தின் பைக் டேங்கை சரமாரியாக அரிவாளால் கொத்தி தீவைத்துவிட்டு தப்பியோடி விட்டது. பின்னர் மீனாட்சி சுந்தரம் முத்துப்பேட்டை போலீசில் தஞ்சம் அடைந்தார்.

இதேபோல் கடந்த மாதமும் முத்துப்பேட்டை வந்து விட்டு இதே பாமணியாற்று பாலம் வழியாக வீடு திரும்பிய மீனாட்சி சுந்தரத்தை ஹெல்மெட் அணிந்த மர்மநபர்கள் வழிமறித்து சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கினர். அவரது பைக்கையும் சேதப்படுத்தினர். இதில் அவர் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மீனாட்சி சுந்தரத்துக்கு கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் நடந்தது. சம்பவம் குறித்து மீனாட்சி சுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ள முத்துப்பேட்டை போலீசார் கூறுகையில் மீனாட்சி சுந்தரத்துக்கும், பெரியசாமிக்கும் இடையே கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து முன்விரோதம் உள்ளது. இதுகுறித்த வழக்கொன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்தான் பெரியசாமி தரப்பினர் தன்னை வழிமறித்து விரட்டி பைக்கை எரித்ததாக மீனாட்சிசுந்தரம் புகார் மனு அளித்துள்ளார் என்றனர்.