மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 
செய்திகள்

நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் மோதல்- பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

சென்னை அரும்பாக்கத்தில் நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் கல்லூரி மாணவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொள்வது பொது மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

ஓடும் பஸ்சில் கைகளால் தாக்கிக் கொள்வது, பஸ்சை தட்டிக் கொண்டு தாளம் போட்டபடியே பயணிப்பது தினமும் நடைபெற்று வருகிறது. இதனால் கல்லூரி வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் பயணிக்கும் பொது மக்களும், பஸ்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்களும் படாதபாடுபட்டு வருகிறார்கள். மாணவர்களிடையே நடக்கும் இது போன்ற சின்ன சின்ன மோதல்கள், பல நேரங்களில் உச்சக்கட்டத்தையும் எட்டியுள்ளன.

அந்த வகையில் நேற்று மதியம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் ஓடும் பஸ்சை வழிமறித்து, தங்களது கல்லூரியிலேயே படிக்கும் சக மாணவர்களை பஸ்சுக்குள் வைத்தும், சாலையில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டியும் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பூரில் இருந்து திருவேற்காடு நோக்கி நேற்று மதியம் 29-இ மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது 4 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென பஸ்சின் முன்னால் நிறுத்தினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய மாணவர்கள் தாங்கள் இடுப்பில் சொறுகி வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து சுழற்றிய படியே சத்தம் போட்டுக் கொண்டு பஸ்சுக்குள் ஏறினர். டிரைவரை மிரட்டி விட்டு தாங்கள் தேடி வந்த மாணவர்களை பார்த்ததும் பஸ்சுக்குள் வைத்தே சரமாரியாக வெட்டினர்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன பயணிகள் அலறியடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்கள். பட்டாக்கத்திகளுடன் வந்தவர்கள் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

பஸ்சில் வயதான பெண்களும் இருந்தனர். மாணவர்கள் நடத்திய கத்திச் சண்டையை பார்த்து அவர்கள் மிரண்டு போனார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் பஸ்சில் பயணம் செய்த அனைவரும் இறங்கி தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பஸ்சில் இருந்த பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் மீது, பட்டாக்கத்தியுடன் வந்தவர்கள் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் உயிர் பிழைப்பதற்காக பஸ்சில் பதுங்கிய மாணவர்கள் பயத்தில் கூச்சல் போட்டனர்.

இந்த நேரத்தில் பஸ் படிக்கட்டு அருகிலேயே வைத்து மாணவர்கள் சிலர் வெட்டப்பட்டனர். பயத்தில் பஸ்சில் இருந்து கீழே குதித்த சில மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களையும் பட்டாக்கத்தி மாணவர்கள் ஓடஓட விரட்டி வெட்டினர்.

இந்த தாக்குதலில் 7 மாணவர்களுக்கு சரமாரியாக வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த அவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலேயே ரத்தம் சொட்ட சொட்ட ஓடினார்கள். இதனை பார்த்து சாலையில் நடந்து சென்றவர்களும், வாகனங்களில் பயணம் செய்தவர்களும், என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கடந்து சென்றனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

காயம் அடைந்த மாணவர்களில் குன்றத்தூரை சேர்ந்த வசந்தகுமார், திருவேற்காடு வேலப்பன்சாவடியை சேர்ந்த ஆகாஷ் ஆகிய 2 மாணவர்கள் மட்டும் மீட்கப்பட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களில் மற்ற 5 பேரும் காயத்துடனேயே தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் யார்-யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 8 மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கும்பலாக வந்து ஆயுதங்களுடன் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளும் மாணவர்கள் மீது பாய்ந்துள்ளன.

இதில் சுருதி, மதன் ஆகிய 2 மாணவர்கள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுருதி ஆரணியை சேர்ந்தவர். மதன் பெரியபாளையம் கக்கன்ஜி நகரை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்கள். தப்பி ஓடிய 6 மாணவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். இவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கூடுதல் கமி‌ஷனர் தினகரன் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர், கேமரா காட்சிகளை வைத்து 6 மாணவர்களையும் அடையாளம் கண்டுள்ளனர். அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.