செய்திகள்

முதலியார்பேட்டையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த இளம்பெண் கடத்தல்- போலீசில் புகார்

முதலியார்பேட்டையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த இளம்பெண்ணை வாலிபர் கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

புதுச்சேரி:

விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கத்தை அடுத்த ரங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் விநாயகமுர்த்தி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களது மகள் பத்மா (வயது18). இவர் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துவிட்டு திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த போது அவருக்கும் சொரப்பூரை சேர்ந்த ஜெனார்த்தனன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை அறிந்த பத்மாவின் பெற்றோர் பத்மாவை முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையத்தில் உள்ள உறவினர் மைதிலி வீட்டில் தங்க வைத்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மைதிலி வீட்டில் இருந்த பத்மாவை திடீரென காணவில்லை. பெற்றோர் வீட்டில் விசாரித்த போது அங்கும் பத்மா செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து மைதிலி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரில் வீட்டில் இருந்த பத்மாவை ஜெனார்த்தனன் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறிஉள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் அகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.